வெண்பா எழுதுங்கால் படும் பாடு

வெண்பா
பாடுவதும் பலருக்கு எளிதாக இல்லை என்று தெரிகிறது. நாம் தேர்ந்தெடுக்கும்
சொற்கள், பொருண்மை உடையனவாகவும் கொண்டு பொருத்துங்கால் யாப்பு அமைதி
உடையனவாகவும் இருத்தல் வேண்டும், இல்லையென்றால் பாட்டு வராது. அதனால் நம்
தமிழர் ஒதுங்கிவிடுகிறார்கள் என்று சொன்னால் அது சரியாக இருக்கும் என்று
கருதுகிறேன்.

அதைப்பற்றி எழுந்தது இவ்வெண்பா:-

கருதுங்கால் காரணம் தென்படும்; வெண்பா
எழுதுங்கால் ஏற்படும் இன்னல் — பொருதுங்கால்
சொற்கள் பொருந்தாமல் சோர்வாய்க் கடித்திடப்
பற்கள் இழந்தன்ன பாடு,

கருதுங்கால் – ஆய்ந்து நோக்குங்கால்; பொருதுங்கால் – சொற்கள் ஒன்றுடன் ஒன்று பொருதும்போது;
சோர்வாய் – சோர்வு உண்டாகி; அதாவது "சோர்வு ஆய்". ஆய் = ஆகி,
இனி, சோர் வாய் = சோர்ந்துபோன வாய் என்று பொருள் கொள்ளலாமோ என்றும் சிந்தியுங்கள். (அப்படியானால் வலி மிகாமல் வரும். )
இழந்தன்ன = இழந்ததுபோன்ற. பாடு – துன்பம்.

ஈண்டு சீர் தளை என்று சொல்லாமல், "சொல், பொருதுதல்" என்று வேறு விதமாக எழுதியுள்ளேன்.

This entry was posted in MY POEMS. Bookmark the permalink.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.