“வாரார் தோழி”

ஔவையாரின் பாடல், ( குறுந்தொகை, பாடல் 200).

பெய்த குன்றத்துப் பூ நாறு தண் கலுழ்
மீ மிசைத் தாய வீஇசுமந் துவந்து
புனலும் இழிதரும் வாரார் தோழி;
மறந்தோர் மன்ற மறவா நாமே
கால மாரி மாலை மா மழை
இன்னிசை உருமின முரலும்
முன்வரல் ஏமம் செய்தகன்றோரே

பெய்த குன்றத்து = மழை பொழிந்த சிறு மலையில்,
பூ நாறு = மலர் மணம் கமழும்;
தண் கலுழ் = தண்மையான கலங்கலின்;
மீ மிசைத்தாய = மேலதாக;
வீஇ சுமந்துவந்து = மலர்களைச் சுமந்துகொண்டு வந்து;
புனலும் இழிதரும் = வெள்ளமும் கீழிறங்கியோடும்;
மாலை மா மழை = மாலையிற் பெரு மழையைக் கொணர்ந்த;
கால மாரி = பருவ முகில்கள்;
இன்னிசை உருமின முரலும் = உருமி இனிய ஒலியை ஏற்படுத்தும்;
மறந்தார் = தலைவர் என்னை மறந்தார்;
மன்ற மறவா நாமே = ஆனால் நாமோ சிறிதளவும் மறக்கவில்லை.
முன்வரல் ஏமம் செய்தகன்றோரே = கார்மழையும் வெள்ளமும் வருமுன்பே வந்துவிடுவேன் என்று சொல்லிச் சென்றவர்.

தலைவியின் ஏக்கம் நமக்குத் தெளிவுறுத்தும் அழகிய பாடல்.

இயற்கை நிகழ்வுகளை இங்கு ஔவைப்பாட்டி மிக்க நயமுடன் கையாண்டிருக்கிறார்.

சொன்ன சொல்லை மறந்துவிட்டுக் காணமற் போய்விட்ட காதலனை எண்ணிக் கலங்கிய காதலியர் முன் காலங்களில் மிகப்பலர். அவர்கள் அழுத கதைகளைப் பல மொழி இலக்கியங்களிலும் காணலாம். தொலைத் தொடர்பு ஏதுமற்ற பழங்காலத்தில் இப்படிக் கலங்குவதைத் தவிர, காதலியருக்கு வேறுவழி எதுவும் இல்லை.

பருவ காலத்திற்கேற்பக் குன்றிலிருந்து இழிந்தோடும் ஓடை நீர், உரியபடி வந்திடத் தவறவில்லை. அழகிய பூக்களைச் சுமந்துகொண்டு, மணம் வீசிக்கொண்டு அது மலையிலிருந்து கீழிறங்குகிறது. காலத்தில் வர மறவாத ஓடை அது.

புனல் நீர் கீழிறங்குதல் போலக் காதலன் மனம் இறங்கவில்லை. இரங்கவுமில்லை. ஓடை காலாகாலத்தில் ஓடிவந்தது போல, அவன் ஓடி வரவுமில்லை. மீண்டும் தலைவியை வந்து காணும் எண்ணம் அவனுக்கிருந்தால் தானே! அது நன்கு தெரிய, “வாரார் தோழி” என்கிறாள் தலைவி.

கார் காலம் வந்தவுடன், அந்த மேகங்கள் மேலூர்ந்து வந்து , மழை உடன் பொழியாவிட்டாலும் உருமியாவது தாமிருப்பதைக் காட்டுகின்றனவே! காதலன் அப்படித் தொலைவிலிருந்து செவியில் வந்து சேரும்படி ஒலிக்குறிப்புகள் எதையும் அனுப்பவில்லை. தோழியோ வேண்டியவர்கள் பிறரோ கண்டோ கேட்டோ சொல்லும்படியான எந்தச் சேதியும், கார்முகில் வந்ததைப் போல காலத்துடன் வரவில்லை.

அதைப்போல, இதைப்போல என்றெல்லாம் வெளிப்படையாகச் சொல்லாமல், இயற்கை நிகழ்வுகளை இலைமறை காயைப் போல வைத்து, (“சூசகமாக” எனலாமா?) சொற்களை இசைத்துப் பாடியுள்ளார் நம் பாட்டி.

அவர் கவியழகே அழகு!

பெய்த, மாலை மாமழை, என்ற சொற்கள், “மாலை பெய்த மா (பெரிய) மழை” என்று கூட்டிப் பொருள்கொள்ளவேண்டியவை. தலைவியின் வீடு, குன்றத்திலோ அதற்கருகில் சாரலிலோ இருந்தது. அவள் வீட்டினண்டை உள்ளது அந்த ஓடை. அவள் அங்கு தோழியுடன் ஏங்கி நிற்கின்றாள்.

மழை பொழிந்தது நேற்று அல்லது அதற்கு முந்தின மாலை. நேற்று மாலை என்பதே மிகப்பொருத்தம். இப்போது கலங்கலாக ஓடி வந்துகொண்டிருக்கும் ஓடை, அணிமைக்காலதிற் பெய்த மழையைக் காட்டுகின்றது. நீர் இன்னும் தெளியவில்லை.

அந்த நீர் தலைவியின் மனம் போலவே மிகவும் தண்மையானது. கலங்கலாக இருப்பது, தலைவியின் கலங்கிய உள்ளத்தையும், “தண்” என்பது, ‘ஆனாலும் தலைவிக்கு அவர்மேல் கோபம் ஏதும் இல்லை’ என்பதையும் பதிவு செய்கின்றன. அது கலங்கல் தான், ஆனால் தண்மையான கலங்கல். அதனால், அவள் அவரை வையவில்லை. அவர் வரமாட்டார் என்று மட்டும் நாகரிகமாகச் சொல்கிறாள்.

முன் பொழிந்த மழை, அவர் முன் பொழிந்த அன்பு மழையைக் கொண்டுவந்து நிறுத்துகிறது. இப்போது மழை இல்லை என்றாலும், வானத்தில் எழும் உருமல், மீண்டும் மழையும் வரும், அவரின் அன்பு மழையும் வரும் என்ற நம்பிக்கையை ஊட்டவல்லது. அதனால், “மறந்தோர்” (=மறந்தார்) என்று உயர்வுப் பன்மையில் கூறுகிறாள். (உயர்வுப் பன்மை = மரியாதைப் பன்மை). தோழிக்கும்தான் கவலை. ஆகையால், அவளையும் உட்படுத்தி,மறவா நாமே என்று பன்மையில் கூறுகிறாள்.

இன்னிசை:

முகில்களின் உருமுதல், இன்னிசை ஆகின்றது. எதிர்காலத்தில் மழை வரும், அவர்தம் அன்புமழையும் வரும் என்ற நம்பிக்கையினால்.

முன்வரல் ஏமம்:

சில குறிப்பிட்ட நிகழ்வுகளின்முன் வந்துவிடுவேன் என்று கூறும் பாதுகாப்புச் சொற்கள்.

மீ மிசைத்தாக:

மீ – மேல்; மிசை = மேல். ஆக மேலே என்பது.
floating on the “water surface” and clearly visible.
(Things can float in water at different levels. This floating was right at top level)

ஓடையில் ஓடிவரும் மலர்கள், மணமுள்ள நன்மலர்கள். கசங்கி அமிழ்ந்துவிடாமல் மேலாக மிதந்துகொண்டு வருகின்றன. தலைவர் வருவார், வாழ்வு மணம்பெறும் என்பதன் நம்பிக்கை அறிகுறி.

தலைவியின் வாழ்வு மணம்பெறுக என்பதே நம் வேண்டுதலுமாம்.

ஔவையாரின் பாடலை மீண்டும் படித்து மகிழுங்கள்.

Advertisements
This entry was posted in Uncategorized and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s