நாவினிக்க வாசிப்போம் நாம்.

வெண்பா எழுத விழையும் உறுப்பினர்க்
கம்பாவா நீயே அருள்செய்வாய் — கண்பாராய்,
ஈண்டெழுதி வந்தோர்க் கினிதான ஊக்கம்தா
மீண்டிடவே மாற்றாய் மடி.

கருத்துகளைச் சொல்லக் களம்புக்க காலை
உறுத்துபவை யாவை பிறரை — பொறுத்திருந்து
ஆய்ந்தக்கால் சார்தி அதுவன்றி ஒன்றில்லை
ஓய்ந்தக்கால் உய்யும் உலகு.

முறைகெட்ட மூளையர் மொத்த மடையர்
கறைபட்ட தீய கருத்தால் — குறைபட்டோர்
பல்லோர் இவர்களுக்காய்ப் பார்க்காமல் தன்மூன்று
பிள்ளைகளைப் பின்வைத்த தாய்.

தேயத்தை முன்வைத்தாள் தீரா மதப்பித்து
மேய மிகையாளர் வேறுபடப் — போயவழி
புட்டோ பெனாசீர் புன்கொலைபார்! பெண்னென்று
பட்டுமா இல்லை பரிவு?

மிகையாளர் = தீவிரவாதிகள்

நாலுசுவை நன்கிரண்டு நண்ணாதார் நாளுமே
கூலம்நன் குப்பிட்டுட் கொண்டாரேல் — ஞாலத்தில்
ஆலமிலா நெஞ்சராய் ஆவி தமிழ்க்கீந்து
காலத்தை வென்றிருப் பார்.

படையிலே இல்லாப் பழியறியா மக்கள்
நடைகளில் வீட்டில் நலிந்தார்மேல் குண்டெறிந்து
ஈழத்தைத் தாக்கிய இன்னாரைப் போக்கியவர்
காலத்தை வென்றிருப் பார்.

புத்தம் புதிய உறுப்பினர் உள்வந்தால்
ஒத்தபால் உள்ளாரே வாரீரென் —றொத்தழைக்க,
எல்லாம் நலமாகும் என்றே நினைப்பார்கொல்,
உள்ளேன்யான் ஒன்றுசொல் லேன்

புத்தம் புதிய உறுப்பினர் உள்வந்தால்
ஒத்தபால் உள்ளாரே வாரீரென் —றொத்தழைக்க,
எல்லாம் நலமாகும் என்றே நினைப்பார்கொல்,
உள்ளேன்யான் ஊமையென் வாய்.

நினைப்பார்கொல் = நினைப்பாரோ, ஒத்தபால் = same gender

இணையத் துலாவந்த இன்முக நண்பர்
துணைநின்று தூயதமிழ் பாடாக் — குணகலால்
காணேன் திரியீதில் கண்டோரே கூறுங்கள்
மானோடிப் போச்சே மறைந்து.

குணகல் (குணகு+அல்) = குணகுதல், மனந்தடுமாறல்
திரியீதில் = இத்திரியில்.

சும்மா எழுதுவாய் சோர்வான தென்னவோ
அம்மா அழைக்ககையில் ஒன்றெழுதித் — தும்மலும்
வந்ததும் இன்னொன் றினிதே வரைந்தேனே
என் தமிழா ஏன் தயங்கு வாய்.

புதுவெங்கா யத்தைப் புகைப்படம் செய்தே
அதுதம் பெயரோவம் ஆக்கிச் — சிதைவின்றி
என்றும்போல் பீடுநடை இத்திரியில் மேற்கொண்ட
நன்றறி நாவலர்க்கு வாழ்த்து.

எங்கே கிடைத்தன வெங்காய ஓவங்கள்
அங்கேயும் செல்வதெவ் வாறென்று — மங்காத
நல்வழி காட்டுவீர் யாம்மகிழ்ந்து நெல்நீர்
புல்பெற்றாற் போலுய்வோம் போய்.

variation:


எங்கே கிடைத்தன வெங்காய ஓவங்கள்
அங்கே அடைவதெவ் வாறென்று — மங்காத
நல்வழி காட்டுவீர் நான்மகிழ்ந்து நெல்நீர்
புல்பெற்றாற் போலுய்வேன் போய்.

நினைப்பதொன் றாக நடப்பது வேறாய்
இருப்பதுவாம் இந்தளவே வாழ்க்கை — இணைப்பில்
நிகழ்வுகள் நீண்டு நிலைகுலைக்கும் நெஞ்சை
அகழ்வது போலுமே ஆம்.

கும்பிடச் சென்றான் கொலைக்குற்றம் சாட்டினார்
கம்பிச் சிறைக்குள் கழுத்திருக்க — வெம்பிக்
கிடந்துழலும் கேடு படத்தெய்வப் பற்றோன்
இறந்தொழிய ஒவ்வா திறை.

காதில் விழுந்த கழறுரைகள் பற்பலவே
ஏதிவற்றுள் யானறியேன் மெய்யென — ஓதுபவர்
தங்கட்சிச் சாய்வாகத் தாளங்கள் போடுவரேல்
மங்கினரே மாண்பும் இலர்.

காதில் விழுந்த கழறுரைகள் பற்பலவே
ஏதிவற்றுள் யானறியேன் மெய்யென — ஓதுபவர்
தங்கட்சிச் சாய்வாகத் தாளங்கள் போடுவரேல்
மங்கினரே மாண்பும் இலர்.

புத்தாண்டு வாழ்த்துக்கள் பூவாம் உலகத்தில்
உத்தமர் ஏசுவின் ஒண்மையை — ஒத்துவாழ்
யாவர்க்கும் வாழ்த்துக்கள் எல்லாரும் ஏற்றிட
மேவும் களத்தார்க்கும் வாழ்த்து.

விடுப்பில் இருந்தாலும் வீட்டினுள் தூங்கா
திடுப்பில் ஒருகறைப் பட்டும் — உடுத்தி
அலுவலைப் பார்க்கவந்து ஆர்வம் மிகுந்தேன்
குலவினேன் கொண்டேன் தமிழ்.

சிறந்த கவி¦யொன்றைச் சிந்தை மகிழ
பறந்த படியே எழுதிக் — கறந்தபால்
போலினிக்கு மாறு புகட்டுவீர் இக்களத்தில்
நாவினிக்க வாசிப்போம் நாம்.

Advertisements
This entry was posted in MY POEMS. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s