கருத்தினிலே பிழைகொண்டார் காதல்

உணரார் திருத்துதல்

கவிதை வடிப்பவன்
கண்ணும் பொருளைப்
புவியினோர் தாமும்
புரிந்தின் புற்றிடப்

பெய்து வடித்த
பெறலருஞ் சொற்களில்
உய்த பொருண்மை
உணரார் திருத்துதல்

ஞாலம் படைத்தோன்
நயந்த நிலவினைச்
சோர மனிதன்
சுவற்றுதல் ஒப்பதே.

கருத்தினிலே பிழைகொண்டார் காதல்

கருத்தினிலே பிழைகொண்டார் காதல் என்றார்
கன்னியொரு கன்னியையே ஏதம் கொண்டார்;

திரைக்கதையோர் சிலப்போது தேரார் தந்த
தெருக்கோடிச் சாக்கடையாய் வீச்சம் பாய்ச்சும்

ஒருத்தருக்கும் பயன்செய்யா ஊத்தை தன்னை
ஒப்புயர்வே அற்றதென ஓங்கிப் போற்றும்

வெறுத்தொருவும் நடப்புகளை மேற்கொண் டாரேல்
வீண்செய்தார் வாழ்வினையே வேறென் சொல்வேன்.

ஏதம் = கெடுதல்; தேரார் = சரியாகச் சிந்தியாமல் செய்தார்; வெறுத்தொருவும் = வெறுத்தொதுக்கும்.

நலமே நேர்க!

வந்துகளம் காணார்க்கும் நலமே நேர்க!
வருதற்கு வாய்க்கார்க்கும் நலமே சேர்க!
நொந்துமனம் குன்றியவர் உளரேல் ஆங்கே
நுடங்காமல் அன்னார்க்கும் நலமே சூழ்க!
செந்தமிழில் சீரோடும் புனைந்த பாக்கள்
சிதைவின்றிக் கண்கண்டு மனத்துட் போக்கி
உந்துபெறும் நல்வாழ்வில் திளைத்தல் அன்றி
ஒருபழுதும் நம்நோக்கில் விளைதல் அற்றோம்.

பேசு தமிழ்!

வானிற் பறந்தாலும் பேசு தமிழ்! — ஓடம்
வாரி மிதந்தாலும் பேசு தமிழ்!
தானை நடந்தாலும் பேசு தமிழ் — பிள்ளை
தாவி அணைந்தாலும் பேசு தமிழ்!

குண்டு வெடித்தாலும் பேசு தமிழ் — காதற்
கோதை துடித்தாலும் பேசு தமிழ்!
செண்டு பிடித்தாலும் பேசு தமிழ்! — பகைச்
சிண்டு கிடைத்தாலும் பேசு தமிழ்!

எதிரி முனிந்தாலும் பேசு தமிழ் — அவன்
இணங்கி வளைந்தாலும் பேசு தமிழ் !
இதரர் குழைந்தாலும் பேசு தமிழ் — தமிழ்
இயலர் விழைந்தாலும் பேசு தமிழ்.

உலகம் வெறுத்தாலும் பேசு தமிழ் — நம்
உறவு சிறுத்தாலும் பேசு தமிழ்! — கால்
நிலவில் பதித்தாலும் பேசு தமிழ் — வளர்
நெருப்பில் குதித்தாலும் பேசு தமிழ்.

மொழிகள் அறிந்தாலும் பேசு தமிழ் — கயல்
விழியர் இணைந்தாலும் பேசு தமிழ். — நம்
மொழியை மறந்து பிற பேசுவதோ — முகத்
திரைக்குள் ஒளிந்தும் உயிர் வாழுவதோ?

அவள்பேர் வரைந்தேன் மணலில்
[a translation of English poem]

அவள்பேர் வரைந்தேன் மணலில் – அது
அழிந்தது மோதும் அலையில்,
தெருள்பெறக் கீறினேன் மீண்டும் – அதைத்
திரைப்பெருக(்கு) ஏறியே தாண்டும்!

வருந்தி வரைந்தது வீணே – அது
அழிந்திடத் தக்கது காணே,
அணந்தது அவள்பெறு வாழ்வு – அங்கு
அழிந்த(து) உடலொடு(உ)ன் பேரும்!

சாவதைச் சாகாத தென்று – அறிவு
சாய்ந்ததில் எண்ணிய துண்டு!
போவது உறுதியே என்பாள் – அவள்
பேச்சைப் பிழைத்தொன்று சொல்வேன்!

தாழ்ந்திடும் யாவும் அழிக -உன்
தக்க புகழ்ப்பெயர் எழுக,
ஓய்ந்திடா என்கவி தன்னால் – நான்
உன்திறம் நாட்டுவேன் முன்னால்!

உன்பேர் புகுமே துறக்கம் – இந்த
உலகெலாம்் சாவோடு இறக்கம்,
என்பெருமாட்டி நம் காதல் – இனி
இந்த உலகிலே மீளும்!

Advertisements
This entry was posted in MY POEMS. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s