other poems

கண்ணாலம் வேண்டாமோடி

கண்ணாலம் வேண்டாமோடி — நாலு
கண்ணாலும் பேசியே ஒண்ணாகும் பண்ணான (கண்ணாலம்)

எந்நாளுமே சிறு பெண்ணாகவே நிற்க
முன்னாளிலே வர மெண்ணாமலே தர
விண்ணாளுவான் கருங் கண்ணாளன் சொன்னானோ?
மண்ணாகும் மேனியை முன்னாலே பொன்னாக்கும்
(கண்ணாலம்).

கண்ணீரில் உன்னாலே இந்நாளிலே தாங்க
ஒண்ணாத இன்னல்கள் உற்றாளே உன்னன்னை
கண்ணார அன்னாளும் கண்ணாலம் கண்ணுற்று
விண்ணேறப் பெண்ணே"ஊம்" சொன்னாலே நன்னாளே
(கண்ணாலம்)

இலக்கியத்தில் அனைத்தினையும்

இலக்கியத்தில் அனைத்தினையும்
கரைத்தருந்தி விட்டேன்;
என்று நினைத் திருப்பவர்கள்
ஒன்றிரண்டா பல்லோர்;

கலக்கிடுவேன் கவிதைகளால்
உரைநடையால் என்பார்;
கருத்துடனே பொருத்தமுடன்
ஒன்றெழுத மாட்டார்;

துலக்குறவே தூயர்பிறர்
தொடங்கிவிட்ட ஒன்றை
குலைப்பதற்கே முனைந்துநின்று
கொக்கரிப்ப தன்றி

இலக்குடையார் அவரலரே
எதுவெனினும் ஒன்றில்
இதுகுறையென் றங்கலாய்த்து
தம்நிலைமேல் என்பார். ( எழுதிய நாள்: 02.01.06)


பறவை இனமொன்று கூடி

பறவை இனமொன்று கூடி — பண்
பாடின; மாநாடு கூடின; அங்கே
நிறைவாய் இருந்த நிகழ்வு — வானில்
நிகரில் உயரத்திற் செல்பவ னுக்கே
முறையாய் மணிமுடி சூட்டி — இந்த
மூன்றுல கத்திலும் முன்னிலை என்றே
அறைந்தே அரசெனப் போற்றும் — ஓர்
அணிவிழ வாகுமென் றார்த்தன கண்டீர்.

தென்றல்:

துணிந்து நுழைந்தென் அறையில் — வரத்
தோன்றிடும் நெஞ்சுரம் யாருக்கடி?
குழைந்தென் னோடே குலவ — இந்தக்
குவலயம் தன்னிலோர் வீரனுண்டோ?

மெல்லக் கதவு திறந்து — எந்தன்
மேனி தழுவிக் கலக்கிடுதே!
சொல்லில் வடிக்கவொண் ணாத — இன்பச்
சோர்வு தன்னை விலக்கிடுதே!

தென்றல் தலைப்பினில் சொன்ன — அந்தச்
சின்னக் கவிதையின் தொடர்ச்சியிதே;
இன்று கிடைத்த அதனால் — நான்
இனிதாய் இவண்வந்து இடுவதுகாண்!

எந்த மொழியில் எதுவந்த போதிலும்


எந்த மொழியில் எதுவந்த போதிலும்
சொந்த மொழிமாறுமோ? — பிற
மந்த எழுத்தினை மாட்டிவைத் தால்என்முன்
உந்தி மனம்போகுமோ?

தாளிகை தன்னில் பிறமொழி கண்டுளம்
தாழ்ந்து பணிந்திடுமோ — இந்திதான்
மாளிகை மன்னன் எனும்கோலம் பூணினும்
மாய்ந்தே இணந்திடுமோ?

விரும்பிப் பலமொழி கற்பேன் அதுகொண்டு
வீழ்ந்து கிடந்தறியேன் — நான்
திரும்பிப் பிறரடி சேர்ந்துளம் சோர்ந்திடும்
தீமை புரிந்தறியேன்.

அன்னை மேரி

அருள்மருவு அன்னை மேரி
அழுதுகண் நீரை மல்கி
பொருள்புலப் படுத்தி னாலும்
புத்துணர் விலாத மண்டை
மருள்படு மகிந்தன் கண்டு
மாற்றிடு வானோ தீய
இருள்படு போரின் பாதை
இவன்விடல் முயற்கொம் பன்றோ!

மிதுலன

அகழ்ந்துள உரைகள் எல்லாம்
ஆய்ந்தொரு கருத்துச் சொல்வார்;
நிகழ்ந்துள நடப்பின் கோவை
நேர்மையிற் பார்வை கூட்டித்
திகழ்ந்திடும் உரநெஞ் சத்தால்
தேன் தமிழ்க் கிடனே தந்தார்;
புகழ்ந்துரை மிதுலன் செய்தார்
மகிழ்ந்துதேன் கலந்தே நன்றி.

தமிழுக்கு இடமுண்டு

துறவுநீ மேற்கொண்ட போதும் — அதில்
தூய தமிழுக்கு இடமுண்டு கூறும்!
உறவுக்குப் பெண்வந்த போதும் — இந்த
உயர்தனிச் செம்மொழிக் கோரிடம் தாரும்.

பரஞ்சோதியார் தமிழோடு — கலந்து
பார்தனில் காவியம் நீயொன்று பாடு!
உரம்பட்ட வாழ்க்கையில் அன்பு — தமிழ்
ஒன்றிணைந்தால் அதில் உண்டுகொல் வம்பு?

யாரும் முனிவராய் ஆகி — கவின்
நாட்டினின்றும் ஒரு காட்டினில் ஏக
நேரிதின் வாய்த்திடும் காலை — மறக்க
நேர்வதுண்டோ தமிழ் நின்றலர் சோலை?


உடல்நலம்
============


உப்பேறிப் போனால் உதவாது உடம்புக்கே;
அப்போது அரத்தக் கொதிப்பாகும் — எப்பாற்கும்
ஒப்பார்ந்த நல்லுணவால் ஓங்கும் உடல்நலத்தைத்
தப்பாமல் சார்வார் தமக்கு.

மெள்ளப் பயின்றே
================

வெள்ளையும் சொள்ளையுமாய் நீங்கள் விழைந்தபடி
மெள்ளப் பயின்றே எழுதுங்கள்—- உள்ளத்தில்
எப்பொழுதும் இன்பம் இழையும் உணர்வுகளைத்
தப்பாமல் சார்வார் தமக்கு.


நினைந்து மறந்து
=================

நினைந்து மறந்து நினைந்து மறந்து
மறந்த ததுவே நினைந்து — முனைந்து
நினைந்து நினைப்ப தனைத்தும் இணைந்து
புனைந்து மகிழல் கலை.

அல்லது:
புனைந்து பொலிதல் கலை.

Advertisements
This entry was posted in MY POEMS. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s